தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகரில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் மகன் விக்னேஸ்வரன் (23). இவர், தூத்துக்குடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். விக்னேஸ்வரனுக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த 18 வயதுடைய தனியார் பெண்கள் கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தினமும் பேசிவந்த இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். பின்னர், காதலித்து வந்த இருவரின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாக, சிவகாசிக்கு வந்த விக்னேஸ்வரன் மாணவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது விக்னேஸ்வரன் தனது அலைபேசியில் வீடியோ படம் எடுத்து வைத்துள்ளார். அதன் பின்பாக காதலர்கள் இருவரும் வாட்ஸ்அப் மெசேஜ் வாயிலாக தொடர்பில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து, மீண்டும் மாணவியை விக்னேஸ்வரன் நெருக்கத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவிக்கவே, இருவரும் தனிமையிலிருந்த வீடியோ படத்தை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் தொடர்ந்து மிரட்டியதை அடுத்து, மனமுடைந்த மாணவி அவமானம் தாங்காமல் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில், படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிவகாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் விக்னேஸ்வரனை கைது செய்தனர். இதில் அவர் மீது போக்சோ சட்டம், தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...செல்போனில் பேசிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிழப்பு!