திருநெல்வேலி: பெற்ற தாயை மகனும், தந்தையும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கப்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக்காரரான முருகன் (49), சங்கரம்மாள் (47) தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு பிள்ளைகள்.
இதில் மகன் தளவாய்சாமி (25), தனது தாயின் அண்ணன் மகளான முறைப்பெண் பூவிதாவை 10 மாதங்களுக்கு முன் மணமுடித்தார். இந்நிலையில், பூவிதா தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட்டப் படிப்புப் பயின்று வந்துள்ளார்.
அவரது படிப்பு முடியும் வரை, அண்ணனிடம் பேசி, பூவிதாவை அவரது வீட்டிற்கு சங்கரம்மாள் அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக மகன் தளவாய் சாமி தன் தாயிடம் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு இங்கிருந்தால், பூவிதாவின் படிப்பு கெட்டு விடும் என்றும், இறுதியாண்டு தேர்வு முடிந்தவுடன் அவளை அழைத்துக் கொள்ளலாம் எனவும் தனது மகனை ஆறுதல் படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சங்கரம்மாளின் கணவரும், அதாவது தளவாய்சாமியின் தந்தை தினமும் குடித்துவிட்டு, தன் மனைவியிடம் சண்டையிடுவதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் தந்தையும், மகனும் சேர்ந்து மதுபோதை ஏற்றிக்கொண்டு, அவ்வப்போது வீட்டில் பிரச்னை செய்வதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சங்கரம்மாள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இறந்ததாக அவரது கணவரும், மகனும் ஊராரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வந்து உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
இந்த மரணத்தில் காவல் துறையினருக்கு சந்தேகம் எழவே, இறந்த பெண்ணின் கணவரிடமும், மகனிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். ஆனால் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இருவரும் தாங்கள் தான் அவரை கொலை செய்து, நாடகமாடினோம் என்பதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில், மனைவியுடன் தன்னை தாய் சேர விடவில்லை எனவும், தந்தையை தாய் மோசமாக திட்டுவதாலும் இருவரும் சேர்ந்து மது போதை ஏற்றிவிட்டு தாயை கொலை செய்யத் திட்டமிட்டோம்.
அதேபோல் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்யும்போது, கிழே தவறிவிழுந்த அவர் மூக்கில் அடிபட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு