புதுக்கோட்டை: பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அறந்தாங்கி அருகேயுள்ள கருங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாண்டி. இவர் 2020 நவம்பர் 4ஆம் தேதி, வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அப்புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மலையாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து, அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக, கூடுதலாக இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து, சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.