ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்ஹார் பகுதியை சேர்ந்த 33 வயதான இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான தனது தாய் மற்றும் மகளுடன் கிராமத்தில் வசித்துவந்தார்.
இந்தப் பெண் 2018ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் விஷ்னோய் என்பவர் மீது பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் விஷ்னோய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (மார்ச்4) அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்ணின் வீட்டிற்கு வந்து, பெண்ணின் பெயரை கூறி அழைத்தார்.
இதையடுத்து அவர் கதவை திறந்த போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பெண்ணின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில் அவருக்கு 90 விழுக்காடு தீ காயம் ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
இது குறித்து கோலுபுரா காவல் நிலைய காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். பாலியல் புகார் அளித்த நிலையில் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே காவல் நிலையத்தில் மன்றாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் எஸ்.பி பாலியல் புகார்! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!