சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரயில்வே ஊழியர் ஒருவர் ரூ.12 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆவடி, மேற்கு காந்தி நகர், பெரியார் 8ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (54). இவர், ஆவடி, சி.டி.எச் சாலையிலுள்ள பிரபல தொழிற்சாலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர், 9ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (46) என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
வெங்கடேசன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், சுரேஷ் குமாரின் மகள் நந்தினி பிரியாவுக்கும், மைத்துனர் ஸ்ரீராமுவின் மனைவி சாய்பிரியாவுக்கும் தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக வெங்கடேசன் உறுதி அளித்துள்ளார்.
மேலும், இருவரிடமும் ரயில்வே துறையின் வேலைக்கான விண்ணப்பப் படிவங்களை கொடுத்து எழுதி வாங்கியுள்ளார். இத்தோடு மட்டுமல்லாமல், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுரேஷ் குமாரிடம் இருந்து இருவருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.
மூன்று ஆண்டுகளாகியும் இருவருக்கும் வெங்கடேசன் வேலையும் வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசனிடம் பணத்தைத் திரும்பத் தருமாறு சுரேஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்து சுரேஷ் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் குமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் நேற்று (நவம்பர் 3) புகார் செய்தார். செங்குட்டுவன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விடிய விடிய மது விருந்து - குடித்த மூவரும் உயிரிழப்பு!