சென்னை: குட்கா, பான் மசாலா போன்ற போதை தரும் புகையிலை பொருள்களை கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல், பயன்படுத்துவது ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாநகராட்சி ஆணையர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒழிப்பதற்கு சென்னை காவல் துறையில் டி, ஏ, பி, டி, பி என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் மூலம் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் வாகன தணிக்கை தீவிரபடுத்தியும், புகையிலை பொருள்களை கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல், பயன்படுத்தல் போன்ற குற்றச்செயல்களில் இவர்களை கண்டறிந்து கைது செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கண்டறிய காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் மேற்படி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை முழுவதும் கடந்த இரண்டு நாள்கள் காவல்துறையினர், வாகன சோதனை, தீவிர கண்காணிப்பு, கிடங்குகள் ஆய்வு போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த குற்றத்திற்காக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 39 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1,051 கிலோ குட்கா புகையிலை பொருள்கள், ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக கொடுங்கையூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்து,ஜோசப் ஆகியோர் குடோனில் 152 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளிக்கரணை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சஞ்சய்காந்தி, குமரன், கிரண் ஆகியோர் குடோனில் இருந்து 257 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!