சிந்த்வாரா (மத்தியப் பிரதேசம்): பச்சிளம் குழந்தை ஒன்று பாதி உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெரிய கல்லால் குழந்தை புதைக்கப்பட்ட இடம் மறைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கொடுத்த தகவலின் பேரில், கிராம மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மீட்கப்பட்ட குழந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் உடலில் எறும்புகள் கடித்த காயங்களும், புதைக்கப்பட்ட நேரத்தில் அதன் மீது போடப்பட்ட கல்லால், ஒரு கை நசுங்கிய நிலையிலும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருமணத்தை மீறிய உறவின் காரணமாக இந்த குழந்தை கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.