சென்னை: கொடுங்கையூர் கே.கே.டி நகர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (20), அதே பகுதியிலுள்ள குயிக் புட் டெலிவரி என்ற உணவகத்தில் இரண்டு நாட்களாக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்றிரவு எபி என்பவர் குட் ஃபுட் டெலிவரி உணவகத்தில் சிக்கன் ரைஸ், சிக்கன் பாப்கான் ஆர்டர் செய்துள்ளார். அதனை ஜே.ஜே. நகர் 7ஆவது தெருவில் கொண்டு வந்து டெலிவரி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இதனை சிவப்பிரகாசம் டெலிவரி செய்ய கொண்டு சென்றபோது, அங்கு எபியும், அவரது நண்பர் ஒருவரும் இருந்துள்ளனர். மேலும், கஞ்சா போதையில் இருந்த இருவரும் கத்தியை காட்டி சிவப்பிரகாசத்தை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து சிவபிரகாசம் ஓட்டிவந்த கருப்பு நிற டியோ இருசக்கர வாகனம், செல்போன், 1000 ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து சிவப்பிரகாசம் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எபி (20), எம்கேபி நகரைச் சேர்ந்த சக்திவேல் (20) என தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் தேடி வந்த நிலையில், கூட்ஷெட் சாலையில் சிவப்பிரகாசத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி பிடிங்கி சென்ற இருசக்கர வாகனத்தில் சக்திவேல் வந்தபோது, எம்கேபி நகர் காவல் துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து எபி என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி