சென்னை: சென்னை ஐஐடி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். இவர் அங்கு படித்தபோது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அதே துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த மாணவர்கள், அதே துறையின் Co-Guides மற்றும் பேராசிரியர் என மொத்தம் 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்ததாக மாணவி புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதம் இதில் தொடர்புடைய மாணவர்கள், Co-Guides மற்றும் பேராசிரியர் என 9 பேர் மீது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள கிங்சோ தேப்ஷர்மாவை இந்த வழக்கு தொடர்பாக நேரடியாக விசாரிக்க மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் தரப்பில், கிங்சோ தேப்ஷர்மா சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக 2 வார கால அவகாசம் அளிக்குமாறு கேட்கப்பட்டது.
கர்நாடகாவில் விசாரணை: எனவே இந்த வழக்கில் அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட மாணவி ஐஐடி சார்பில் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்கு ஐ.வி (Industrial Visit) சென்றிருந்தபோது அங்கு வைத்து தன்னை, உடன் படித்த மாணவர்கள், Co-Guides உள்ளிட்டோர் பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடிப்படையாக வைத்து, மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் கூர்க் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சென்ற இடம், மாணவியுடன் வந்தவர்கள் யார் யார் என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
தனித் தனியாக விசாரணை: மற்றொரு தனிப்படை போலீசார் சென்னை ஐஐடி வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் படித்த மாணவிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியிடம், வழக்கின் விசாரணை அதிகாரியான கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் இ-மெயில் மூலமாக விசாரணை நடத்தினார்.
இ-மெயிலில் விசாரணை: அதில், இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் மாணவியிடம் யார் யார் பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்த முழு விவரங்களை வாக்குமூலமாகப் பெற்றுள்ளார்.
குறிப்பாக, பாலியல் புகார் விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர்கள், Co-Guides மற்றும் பேராசிரியர் என அனைவரின் தொடர்பு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு, 2 இ-மெயில் மூலமாக பதில்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய ஆதாரம்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் 2 இ-மெயில்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்களாக பார்க்கப்படும் என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அடுத்ததாக ஐஐடி வளாகத்தினுள் அமைந்துள்ள மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரபேக்காவிடமும் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிகிச்சை குறித்து விசாரணை: குறிப்பாக, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காலகட்டத்தில் ஐஐடி வளாகத்திலுள்ள மருத்துவமனையில் அவருக்கு அதற்கான சிகிச்சைகள் ஏதும் அளிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, கடந்தாண்டு புகார் அளித்தபோதே புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு காவல் துறையினர் உட்படுத்தினர். அந்த பரிசோதனை அறிக்கையும் காவல் துறையால் ஆதாரமாக பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி பட்டியல் இன மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை