திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் (31) என்பவர் நேற்றிரவு (ஜன.19) நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காரில் வந்த கும்பல் ஒன்று செந்தில்வேல் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 5,000 பணத்தை கத்தி முனையில் பறித்துச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி, நகரம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடினார்.
அப்போது கே.டி.சி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நான்கு பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். அங்கு சென்ற ஆய்வாளர், நான்கு பேரையும் மடக்கி பிடித்து விசாரித்த போது, செந்தில்வேலிடம் நகை பறித்தது அவர்கள்தான் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த நான்கு பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மனோஜ்குமார் (27) ரகுவரன் (31) அபிசேக் (26) பிரவின் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆய்வாளர் ஆதம் அலி, நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த தங்க நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார். பின்னர் நான்கு பேரும் நெல்லை மாவட்ட JM I நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கேபிள் டிவி ஆபரேட்டர் கொலை: 9 பேர் கைது