சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் வீட்டுக்கு எதிரே ஸ்வீட் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது மனைவி கண்ணகி (28). இந்த தம்பதியினருக்கு கவி வர்ஷன் (5), நட்சத்திரா (2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன.
ராஜ்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடி விட்டு வீடு சென்றார். இதையடுத்து, வியாழன் அதிகாலை 1.30 மணியளவில் ராஜ்குமார் வீட்டில் இருந்து பயங்கரமாக அலறல் சத்தம் கேட்டதால், வீட்டின் உரிமையாளர் ராமசாமி உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அப்போது கண்ணகி, ராஜ்குமார் மற்றும் குழந்தைகள் ஆகிய 4 பேரும் பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதில் கண்ணகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜ்குமாரின் கை, கால் மற்றும் முகத்தின் வலது புறம் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 2 குழந்தைகளின் கை, கால்களிலும் தீ காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குமரன் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடன் தொல்லையா? தொழில் நஷ்டமா? அல்லது குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக ஆலங்குடி வேட்பாளர் அறிவிப்பு.. தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு..