தருமபுரி: அரூர் அடுத்த கீழானூர் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்தது. கால்நடைகள் மேய்ப்பவர்கள் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் விசாரணையில் "மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண், சித்தேரி அருகே வெள்ளாம்பள்ளியை சேர்ந்த பார்வதி(32) என்பது தெரியவந்தது. பார்வதிக்கும் ஆண்டியப்பன் என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் உள்ள நிலையில் கடந்த 9 வருடங்களுக்கு முன் ஆண்டியப்பன் இறந்து விட்டதால் குழந்தைகளோடு தனியாக கீரப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வாழத்தோட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (42) என்பருடன் பார்வதி முறையற்ற உறவில் இருந்ததாக தெரிகிறது. உண்ணாமலை என்ற பெண்ணுடன் சக்திவேலுக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி உண்ணாமலை இறந்துவிட்டதால், இரண்டாவதாக ஏழு வருடத்திற்கு முன்பு இந்துமதி, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இரண்டாவது மனைவி இந்துமதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பார்வதிக்கும், சக்திவேலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனிடையே, பார்வதிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் சம்பவத்தன்று பார்வதியை அரூருக்கு வரவழைத்து, அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் இருவரும் கீழானூர் காப்பு காட்டுக்குள் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்பு மீண்டும் ஒருமுறை உல்லாசத்திற்கு அழைத்ததற்கு பார்வதி சம்மதிக்காத காரணத்தால் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் அடித்து முகத்தை சிதைத்து உள்ளார் சக்திவேல்" என்றனர் போலீசார்.
சம்பவ இடத்திலேயே பார்வதி இறந்து விட்டதால், அவரது கழுத்தில் அணிந்திருந்த தோடு, வெள்ளி கொலுசு அனைத்தையும் எடுத்துக்கொண்டு கோட்டப்பட்டியில் உள்ள இரண்டாவது மனைவி இந்துமதி வீட்டிற்கு சக்திவேல் அங்கு சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் கோட்டப்பட்டிக்கு சென்று சக்திவேலை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: TET Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேதி அறிவிப்பு!