சென்னை: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (ஏப். 1) பெண் வழக்கறிஞர் தனது தாயுடன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெண் வழக்கறிஞர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த நபர், அவரிடம் தவறாக நடந்துகொண்டு வந்ததாக தெரிகிறது.
குண்டூசியும் ஆயுதம்: இதனால், கோபமடைந்த பெண் வழக்கறிஞர், தனது கையில் வைத்திருந்த குண்டூசியை வைத்து அந்த நபரின் கையை குத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
பேருந்து, மதுரவாயல் வானகரம் சிக்னல் அருகே சென்றபோது மதுரவாயல் போலீசார் உடனடியாக விரைந்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன் (40) என்பதும், பெண் வழக்கறிஞரிடம் தவறாக நடந்து கொண்டதும் உறுதியானது.
உடனடி நடவடிக்கை: இதனையடுத்து, ராகவன் மீது போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமான செயல் புரிதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். புகார் அளித்த அரை மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பெண் வழக்கறிஞர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதேபோல் திருவான்மியூரில் இருந்து பெங்களூர் சென்ற பெண் பத்திரிகையாளரை சக ஆண் பயணி ஒருவர், தவறாக நடந்து கொண்டது தொடர்பாக ஆன்லைன் மூலம் கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீஸ் கண்முன்னே தவறாக நடக்க முயன்றவரை வெளுத்து வாங்கிய பெண்!