சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இயங்குகின்றன.
இந்நிறுவனங்களில் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு நடைபெற்றதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
37 இடங்களில் சோதனை
சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட சுமார் 37க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சோதனையில் ரூ.150 கோடி அளவுக்கு டெக்ஸ்டைல், தங்க நகை கடைக்குத் தேவையான பொருட்கள் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரவணா செல்வரத்தினம் குழுமத்தில் போலி ரசீதுகள், ஆவணங்கள் மூலம் சுமார் ரூ. 80 கோடிக்கு முறைகேடு செய்யபட்டுள்ளது. பழைய பொருட்கள் விற்பனையில் ரூ. 7 கோடி முறைகேடு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ரூ.1,230 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
மொத்தமாக ரூ. 10 கோடி கணக்கில் வராத பணம், ரூ. 6 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் ரூ. 1,230 கோடி அளவிலான பணம் கணக்கில் காட்டாமல் முறைகேடு செய்யப்பட்டது கண்டறியப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு இரு குடும்பத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிட்காயினில் முதலீடு: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை