வேலூர் மாவட்டம் குடியாத்தம், பிச்சனூர் பேட்டை அருகேயுள்ள ஆர்.எஸ். நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (39). இவர் வேலூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராகப் பதவி வகித்துவருகிறார். மேலும், பைனான்ஸ், காலனி தொழிற்சாலை ஆகியவற்றை நடத்திவருகிறார்.
காதல் - மோதல்
இவரும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பச்சையப்பன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வித்யா (33) என்பவரும் காதலித்து 2014ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், சுந்தர் வித்யாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சுந்தருக்கு பல பெண்களுடன் உறவு இருந்ததாகவும், இது குறித்து இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சினை இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
முதல் தகவல் அறிக்கை
மேலும், இது குறித்து காவல் நிலையத்திலேயோ அல்லது வெளியில் யாரிடமாவது புகார் கொடுத்தாலோ கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல்விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர், சுந்தர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டு குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை!