காஞ்சிபுரம்: பிச்சிவாக்கம் அருகே அறுந்துகிடந்த மின்சாரக் கம்பியில் தெரியாமல் கால் வைத்த எட்டு வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பிச்சிவாக்கம் அடுத்துள்ள பட்டு முதலியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பலராமன் - விமலா தம்பதி, தங்களுக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தில் மல்லிகைப்பூ தோட்டம் வைத்துப் பராமரித்துவருகிறார்கள். இந்தத் தம்பதியருக்கு ஸ்ரீமதி என்ற எட்டு வயது மகள் இருந்தார்.
இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று முழுவதும் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் வேளாண் நிலத்தின் வழியே செல்லக்கூடிய மின்சார வயர் அறுந்து மல்லிகைப்பூ தோட்டத்தின் உள்ளே விழுந்துகிடந்தது.
மின்சார வயர் அறுந்துவிழுந்து கிடந்ததை அறியாத சிறுமி ஸ்ரீமதி, தனது தோட்டத்தின் உள்ளே செல்லும்பொழுது மின்சார வயரின் மீது தெரியாமல் கால் வைத்துள்ளார். இதில் சிறுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "வேளாண் நிலம் வழியாகச் செல்லும் மின்சாரக் கம்பிகள் தாழ்வாக உள்ளது. இது எப்போது அறுந்துவிழும் என்று தெரியவில்லை. சாதாரண காற்று அடித்தால்கூட மின்கம்பிகள் அறுந்து விழுந்துவிடுகின்றன.
மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் தற்போது 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இனியாவது வயல்வெளியில் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களை சீரழித்து வீடியோ விற்பனை - கின்னஸ் சாதனை யோகா பயிற்சியாளர் கைது