தூத்துக்குடி: உடன்குடி கருப்பட்டிக்கு பிரசித்தி பெற்ற ஊர். முன்னதாக, இங்குள்ள ஆலைகளில் சர்க்கரையைப் பயன்படுத்தி கலப்பட கருப்பட்டி, பனங்கற்கண்டுகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள், சக்தி முருகன், முனியராஜ் ஆகியோர் அங்கு நேரில் சென்று நேற்று (ஜூன்.17) ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஐந்து ஆலைகளில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,340 மூட்டை (67 டன்) வெள்ளை சர்க்கரையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 23.25 லட்சம் ரூபாயாகும். இந்த ஆலைகளுக்கு வெள்ளை சர்க்கரை விநியோகம் செய்த மொத்த விற்பனை நிறுவனத்திலும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 8.5 லட்ச ரூபாயாகும்.
இந்த நிறுவனங்களின் மீது, தற்போது டிஆர்ஓ (ம) உணவு பாதுகாப்புத் துறையின் நீதி வழித்தீர்வு அலுவலரிடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப் பிரிவு 57இன் கீழ் வழக்குப் பதிவு செய்யும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கிலோ சர்க்கரை அதிகபட்சம் 40 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், கருப்பட்டி தயாரிக்க பதநீரை காய்ச்சும்போது, அதனுடன் வெள்ளை சர்க்கரையை அதிகம் கலந்து, ரசாயன நிறமியைச் சேர்த்து போலி கருப்பட்டி தயாரிப்பதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதனை அவர்கள் கிலோ 400 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்தனர். உடன்குடி பகுதியில் போலி கருப்பட்டி மற்றும் போலி பனங்கற்கண்டுகள் தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது- மு.க. ஸ்டாலின் அறிக்கை!