கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை வீரன் (38). இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள வேளாண் நிலத்திற்குச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மதுரைவீரனின் உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது, அதே பகுதியில் கரும்பு காட்டில் அவர் சடலமாக இருப்பதாக ஊர் மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வடபொன்பரப்பி காவல் துறையினர் மதுரை வீரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கரும்பு காட்டில் உடல் வீச்சு
மேலும், மதுரை வீரனின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் மதுரைவீரன் அதே பகுதியில் முனியன் என்பவரது வயலில் சட்டத்தை மீறி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், மின்வேலியில் சிக்கி மதுரை வீரன் உயிரிழந்தார் என்பதை மறைப்பதற்காக முனியன், அவரது உறவினர்களான இளையராஜா, வீரன், அய்யனார் ஆகியோருடன் சேர்ந்து மதுரை வீரனின் உடலை அங்கிருந்து எடுத்து அருகில் உள்ள துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான கரும்பு காட்டில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக வடபொன்பரப்பி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முனியன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: கடத்தல் மணலில் கோயில் நிலம் சீரமைப்பு?; ஒருவர் கைது!