சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் தியோடர் (56). இவர் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். காதலர் தினத்தன்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு ஜேக்கப் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மறுநாள் (பிப்.15) காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த ஜேக்கப், கடையின் உள்பக்கத்தில் இருந்த மற்றொரு கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மூன்றாவது மாடியில் உள்ள இரும்பு கதவை பிளேடால் அறுத்து உள்ளே வந்த கொள்ளையர்கள், லாக்கரில் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் காவல் துறையிடம் சிக்காமல் இருக்க அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை உடைத்து திருடிச் சென்றதும் தெரியவந்தது. பின்னர் சேலையூர் காவல் நிலையத்திற்கு ஜேக்கப் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா