சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரைச் சேர்ந்தவர் ஹரிக்குமார். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, வடிக்கையாளர்களுக்கு டிமேட் கணக்கு தொடங்க நியமிக்கப்பட்டிருந்த, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் செக்யூரிட்டிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அந்த நிறுவனத்தை விட்டு விலகிய பின்னரும் ஹரிக்குமார், தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த முதியவர்களிடம் தொடர்ந்து வங்கி ஊழியர் போல நாடகமாடி, நம்பிக்கை ஏற்படுத்தி வந்துள்ளார்.
முதியவர்களிடம், அவர்களது ஓய்வூதியம், சேமிப்பு பணத்தை ஸ்ரீராம் சிட்ஸ், ஜேகே டயர்ஸ், டிஹெஃப்எல் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து நல்ல லாபம் பெறலாம் எனவும் அதற்கு தான் உதவுவதாகவும் கூறியுள்ளார்.
முதியவர்களிடம் தொகையை காசோலையாக பெற்று மேற்படி நிறுவனங்களின் பெயர்களில், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் வரவு வைத்துள்ளார். பணம் பெற்றவர்களுக்கு போலி நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகளை ஹரிக்குமார் கொடுத்துள்ளார்.
அவ்வாறு நிரந்தர வைப்புத் தொகை கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதிர்வுத் தொகை திரும்ப கேட்கும் போது, அவர்களிடம் மேலும் இரண்டு வருடங்களுக்கு வைப்புத் தொகையைப் புதுப்பிக்குமாறு ஹரிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை, பங்கு சந்தையில் முதலீடு செய்து சுயலாபம் அடைந்த ஹரிகுமார் சொன்னபடி முதிர்வு தொகையைத் திரும்ப கொடுக்காமல் சுமார் 10க்கும் அதிகமான முதியவர்களை ஏமாற்றியுள்ளார்.
இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, ஹரிகுமாரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவுபடி, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிகுமார் இதே போல மேலும் பலரிடம் ரூ.4 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. அவரிடமிருந்து, ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலி நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகள், ஸ்ரீராம் நிரந்தர வைப்புத் தொகை முத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
முதியவர்கள் தங்களது பணத்தினை முதலீடு செய்யும் போது இடைதரகர்களை நம்பி ஏமாறாமல், சரியான நிதி நிறுவனங்களை கண்டறிந்து விழிப்புடன் முதலீடு மற்றும் சேமிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜுவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நன்னடத்தைப் பிணை உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது!