சென்னை: கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட மது குப்பிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதைப்பொருட்களை வைத்திருப்பவர்கள், சட்ட விரோதமாக மது குப்பிகளைப் பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பையும், வாகனத் தணிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மே 30ஆம் தேதி திருமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்து மது குப்பிகளை விற்பனை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த தனுஷ்பிந்தாஸ் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1, 398 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
சிக்கிய வாகனங்கள்
இச்சூழலில், அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி, காரில் மதுக்குப்பிகள் கடத்தி வரப்படுவதாக அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் ஆய்வாளரின் தலைமையிலான காவல் துறையினர், பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவங்கரை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி, மூன்று கார்களை மடக்கிப் பிடித்தனர். வாகனத்தில் இருந்த நபர்கள் சுதாகரித்துக் கொண்டு தப்பியோடிவிட, அண்ணா நகர் மேற்குப் பகுதியில் வசித்துவரும் நேபாள நாட்டைச் சேர்ந்த சோனு (39) என்பவர் மட்டும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
மேலும், மடக்கிய வாகனங்களைப் பரிசோதனை செய்தபோது, அதில் 60 பெட்டிகள் அடங்கிய 2,880 மது குப்பிகளும், 50 பெட்டிகள் அடங்கிய 477 பீர் குப்பிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வானங்களுடன் மது குப்பிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட சோனு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கைப் பயன்படுத்தும் சமூக விரோதிகள்
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, கள்ளச் சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கும் பொருட்டே இந்த மதுபாட்டில்கள் மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வரப்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே திருமங்கலத்தில் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் சிக்கியுள்ளார்.
எனவே பிடிபட்ட சோனுவிடம் நடத்தப்படும் விசாரணையில் மதுபாட்டில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது? சென்னையில் யாரிடம் கொண்டு சேர்க்கப்படவுள்ளது? என்பது குறித்து கேட்டு இந்த மதுபானக் கள்ளச்சந்தை சங்கிலியை உடைக்கும் அடுத்தகட்ட முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் மதுவிலக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதனை அழிக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.