சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, கஞ்சாவை பதுக்கியுள்ள நபர்கள் ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருப்பதாகவும் தி. நகர் கலால் ஆய்வாளர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற கலால் அலுவலர்கள் திரிபுராவை சேர்ந்த முகமது மம்மூல் இஸ்லாம் (22), ஷெரீப் செளத்ரி, சாஹின் மியா (23) ஆகிய மூன்று பேரிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கொரியர் மூலம் திரிபுரா மாநிலத்திலிருந்து பார்சல் அனுப்பி கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெருங்குடி பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கலால் அலுவலர்கள் வருவது பற்றி முன்னரே தகவலறிந்து, பெருங்குடி வீட்டில் வசித்த ஜோத் மியா (20) என்பவர் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 140 கிலோ கஞ்சா மற்றும் மூவரும் துரைப்பாக்கம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கப்பலில் ஏகே 47 கடத்திய ஆறு பேர் கைது!