சென்னை பெசன்ட் நகர் ஓடைகுப்பம் பகுதியில் வசித்துவருபவர்கள் சதீஷ் மற்றும் காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வினி, தரணி என்ற இரு மகள்கள் உள்ளனர். சதீஷ் தம்பதியினர் பெசன்ட் நகர் பீச்சில் கடை நடத்தி பிழைத்துவருகின்றனர்.
கடை வியாபாரத்திற்கு செல்லும் முன் பெற்றோர் இருவரும் தின்பண்டங்கள் சாப்பிட மகள்கள் இருவருக்கும் காசு கொடுத்துசெல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
குளிர்பானம் அருந்தியதும் மயக்கம்
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சதீஷ்-காயத்ரி தம்பதியரின் 2ஆவது மகள் தரணி (13) வீட்டின் அருகில் உள்ள மளிகைக் கடையில் பெற்றோர் கொடுத்துவிட்டு சென்ற பணத்தில் குளிர்பானம் (Togito)ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தரணிக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். அதைப்பார்த்த சிறுமியின் சகோதரி அஸ்வினி என்னவென்று கேட்க தன்னால் நிற்க முடியவில்லை என்றவாறே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளி வரவே பதறிய சகோதரி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியின் உடல் முழுவதும் நீலம் படிந்திருந்ததால் சிறுமியின் பெற்றோரும், அப்பகுதிவாசிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்த்ரி நகர் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாஸ்த்ரி நகர் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி குடித்த குளிர்பானத்தின் சிறு அளவையும் ஆய்விற்கு உட்படுத்த அனுப்பியுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று(ஆக்.4) உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு மேற்கொண்டு கடைகளிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், சிறுமி குடித்த குளிர்பானம் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் சோகம்
தனது மகளுக்கு எந்தவிதமான நோய் நொடியும் இல்லை எனவும் காலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த மகள் மாலை இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை எனவும், தன்னை பார்க்காமலேயே தன் மகள் சென்றுவிட்டதாகவும் கூறி சிறுமியின் தாய் காயத்ரி கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கண்கலங்க செய்தது.
தனது சகோதரியுடன், தான் மட்டுமே இருந்ததாகவும், விளையாடிவிட்டு வந்து குளிர்பானம் குடித்தவளைப் பாதியில் தடுத்து உணவருந்த அழைத்தபோதுதான் தனது சகோதரிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், உயிரிழந்த பின் தனது சகோதரியின் உடல் முழுவதும் நீலம் படிந்திருந்தது அதிர்ச்சியாக இருந்ததாகவும் கூறுகிறார் சிறுமியின் சகோதரி அஸ்வினி.
"மணிக் கடை" என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் அந்த மளிகைக் கடையில் எப்போதுமே தரமற்ற பொருட்களைத்தான் விற்பனை செய்து வருகின்றனர். சிறுமி அருந்திய குளிர்பானம்கூட கடந்த ஆண்டு காலாவதியான குளிர்பானமாக இருந்தது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அப்பகுதியிலுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு தரமுள்ள பொருள்கள்தான் விற்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2.45 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன!