குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தொண்டான்துளசி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பங்கேற்றார். அவருடன் கே.வி. குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதனும், வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
இக்கூட்டம் தொடங்கிய உடன் கிராம சபைக் கூட்டம் என்றால் என்னவென்று தெரியுமா? என பொதுமக்களைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் கேட்டார். அதற்கு பொதுமக்கள் தங்களது குறைகளை கேட்கும் கூட்டம் என்று பதிலளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒவ்வொருவராக தங்கள் பகுதி பிரச்னைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... ‘வா குவாட்டர் கட்டிங்’ என்றழைத்த நிறுவனம்!
குறிப்பாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்பது, சாலை வசதியை சீர் செய்வது, பசுமை இல்லம் அமைத்துத் தருவது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முன் வைத்தனர். ஒவ்வொன்றையும் கவனமுடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி உத்தரவிட்டார்.
மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், அந்தப் பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்தும், பொது மக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார்.
குறிப்பாக ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசித்து, 32 நபர்களுக்கு உடனடியாக வீட்டு மனைப்பட்டா வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
'எங்ககிட்ட சரக்கு இருக்கு' - வாசலில் ஆள் நிறுத்தி மது விற்பனையில் ஈடுபட்ட உணவகத்தினர்!
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் யாருக்காவது உதவித் தொகை கிடைக்காமல் இருக்கிறதா? என்று மாவட்ட ஆட்சியர் கேட்டார். அதற்கு இரண்டு பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளி அட்டை இருந்தும் உதவித் தொகை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். உடனடியாக மாற்றத்திறனாளி அட்டைக் கொண்டு வரும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அட்டையில் உள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களின் குழந்தைகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சுமார் 2 மணி நேரம் தரையில் அமர்ந்தபடி மாவட்ட ஆட்சியர் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினார்.
பின்னர் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது.