வேலூரில் கடந்த மார்ச் 17ஆம் தேதி ஆட்டோவில் ஆண் நண்பருடன் சென்ற பெண் மருத்துவர், கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சத்துவாச்சாரிப் பகுதியைச்சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இளம்சிறார் ஒருவரைத் தவிர்த்து, மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன், 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி தாக்கல் செய்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்: இதனை ஏற்று கடந்த 23ஆம் தேதி வழக்கு விசாரணை எண் 22/2022 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது காவல் துறை தாக்கல் செய்துள்ள 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையின் நகல்கள் அவர்களிடம் வழங்கப்பட்டது.
விரைவில் தண்டனை: இந்நிலையில் இவ்வழக்கு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய வழக்குகள் மட்டுமே நடைபெறும் என்பதாலும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரிவுகள் அதிகபட்ச தண்டனை வழங்க முகாந்திரம் உள்ளதாலும் விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.