கடந்த இரண்டு நாட்களில் கரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பது பெரும் சவாலாக அமையக்கூடும் என்ற நிலையில், இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள் திறந்திருக்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், தாபாக்கல் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க சொல்லியுள்ளோம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களும், இங்கிருந்து வெளியில் செல்லும் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி விசாரித்து தகுதியான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மற்ற வண்டிகளுக்கு அனுமதி கிடையாது. ரேசன் கடைகளில் 30 நாட்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 30 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
வெளிநாட்டிலிருந்து வந்து கிராமபுரத்தில் தங்கியுள்ளவர்களும் தங்கள் விவரத்தை கிராம நிர்வாக அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் 62 பேரை வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். 17 பேர், 28 நாளை கடந்ததால் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு வந்துள்ளார்கள். மீதி 47 பேரை தனி பணியாளர்களை நியமித்து அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து வருகிறோம். அரசு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டில் வந்தவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்காமல் இருப்பவர்கள், பாஸ்போட் புதுபித்தலுக்கு வரும்போது புதுபிக்கப்படாது. 144 உத்தரவை பொறுத்தவரை முதல்வர் கூறிய அனைத்தும் பின்பற்றப்படும்.
வேலூரைப் பொறுத்தவரை வெளிமாவட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக எடுக்க வேண்டாம் என சுகாதார துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வேலூர் பென்ட்லெட் மருத்துவமனையில் (பழைய மருத்துவமனை) 125 படுக்கை உள்ளது. அதில் தற்போது 25 நோயாளிகள் உள்ளனர். அவர்களை அடுக்கம்பாறைக்கு மாற்ற உள்ளோம். இதையடுத்து 125 படுக்கையைக் கொண்ட பழைய மருத்துவமனையும், அடுக்கம்பாறையில் உள்ள 100 படுக்கையை கொண்ட வார்டுகளும் கரோனா வைரஸ் பெரும் தொற்றுக்காக தனித்துவ (EXCLUSIVE) மருத்துவமனையாக மாற்றப்படும். இதில் மற்ற நோயாளிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதுதவிர (ESI) தொழிலாளர் மருத்துவமனையில் இருக்கும் 35 படுக்கையை எடுக்க உள்ளோம். வீட்டு கண்காணிப்பில் வைக்க முடியாதவர்களை வைக்க விஐடி விடுதியைக் கேட்கப்பட்ட நிலையில், அதை தருவதாக கூறியுள்ளார்கள். அதில் 300 பேர் வரை தங்க வைத்து கண்காணிக்க முடியும். சிஆர்பிசி 133, எப்பிடேமிக் டிசிஸ் விதி 897, சுகாதாரா விதி 939, IPC 188 ஆகிய பிரிவுகளின் கீழ் சில உத்தரவுகளை பிறபிக்க உள்ளோம். இதற்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. இவற்றால் வரும் சின்ன சிரமங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வேலூரில் இதுவரை எந்த நபருக்கு கரோனா வைரஸ் பெரும் தொற்று பாதிப்பு இல்லை. வீட்டுக்காவலில் 22 நாள் வைக்கப்பட்ட பிறகே வெளியில் விடப்படுவார்கள். வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்க 3 சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைபடும் பட்சத்தில் அது அதிகரிக்கப்படும். இவர்கள் காலை, மாலை சோதனை மேற்கொள்வார்கள்.
அரசு மருத்துவமனையில் 120 வென்ட்டிலேட்டர் இருக்கும் நிலையில், 45 வென்ட்டிலேட்டரை தயார்படுத்தியுள்ளோம். கூடுதலாக 10 கேட்டுள்ளோம். தேவையற்ற நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கு மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவர். பார்வையார்கள் ஒருவரைத் தவிர மற்றவருக்கு அனுமதி இலலை.
வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களை காட்டுப்பாட்டு அறையில் இருந்து வீடியோ கால் மூலம் வீட்டில் உள்ளார்களா என்பதை கண்காணித்து வருகிறோம். இவர்கள் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். தனிமை படுத்தப்பட்டவர்கள் மீது எந்த வித துன்புருத்தலோ, அச்சுருத்தலோ செய்திடக் கூடாது.
மருத்துவர்களை ஏ, பி, சி, டி என நான்கு பிரிவாக பிரித்துள்ளோம். ஒரு குழு எப்போதும் இருப்பில் இருக்கும். ஏப்ரல் 30 வரை எந்த அலுவலர்களும் விடுமுறை எடுக்கக்கூடாது.
மேலும் ராணுவத்தில் சாட் சர்வீஸ் கமிஷனில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், உதவியாளர்கள் என 30 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்களை வைத்து ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில், தனியார் மருத்துவமனையில் 25% படுக்கைகளை அரசுக்கு கொடுக்க கேட்டுள்ளோம். இதில் மருந்தகர்களும் கலந்து கொள்வார்கள். கரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முகமூடி 10 ரூபாய்க்கும், கிருமி நாசினி 100 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.