வேலூர்: காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராத்தில் "செயின்ட் ஜோசப் கருணை இல்லம்" என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில், இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சமூகநலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருப்பதும், அவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமல் துன்புறுத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 8 பேர் மட்டும் தங்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் மேற்பார்வையாளராக பாதிரியார் தாமஸ் என்பவரும், பொறுப்பாளராக சாந்தி என்பவரும் இருந்து வருகின்றனர். இந்த இல்லம் உரிய அனுமதியின்றி இயங்குவதாக தெரியவந்துள்ளது.
இது ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்ட இல்லம் ஆகும். ஆனால், கருணை இல்லம் செயல்பட நீதிமன்ற ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கருணை இல்லத்தில் தங்கியுள்ளவர்களை அடித்து துன்புறுத்துவதும் உறுதியானதால் 69 பேரில் 61 பேரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம். பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மீதமுள்ள 8 பேரை வேறு முதியோர் இல்லத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இல்லத்துக்கு சீல் வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
தங்களை இங்குள்ள பொறுப்பாளர்கள் தங்களை கடுமையாக அடித்து துன்புறுத்துவது மட்டுமின்றி தகாத வார்த்தைகளால் திட்டுவதாக இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் கூறினர். 2017ல் இக்கருணை இல்லத்தின் மீது எழுந்த புகாரால் காஞ்சிபுரம் உள்ளிட்ட இது தொடர்பான இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீபாவளி போனஸ் கொடுக்காததால் ஆத்திரம்; கடை முன் குப்பையை கொட்டிய சுகாதாரப் பணியாளர்