வேலூர்: சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (44). திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இவர் மீது வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைக் கைதியாக குடியாத்தம் கிளைச் சிறையில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அடைத்தனர்.
மேலும் நிர்வாகக் காரணங்களுக்காக நவம்பர் 13ஆம் தேதி ரமேஷை குடியாத்தம் சிறையிலிருந்து வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறைக்கு மாற்றினர்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 16) இரவு சிறையில் இருந்த ரமேஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக சிறைத் துறையினர் அளித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியார் பள்ளி தாளாளர் மீது புகார்