திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையின் குறுக்கே நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார்.
அவ்வாறு கடக்கும்போது வேகமாக லாரி வருவதைப் பார்த்த அவர் இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு இறங்கி ஓடியுள்ளார். இதனால் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. லாரியின் அடிப்பாகத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்திலிருந்து எரிபொருள் கசிந்ததில் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, லாரியின் முன்பக்கம் முழுவதும் தீ பரவிய நிலையில் லாரி ஓட்டுநர் லாரியிலிருந்து இறங்கியுள்ளார். அதற்குள் லாரியின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து லாரியின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனத்தை மீட்டனர்.
பின்னர் லாரியில் சோதனை மேற்கொண்டபோது கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் கடத்திவரப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மணல் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் சினிமா பாணியில் கைது!