வேலூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் சற்று தணிந்து உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு வகுப்பறையின் உள்ளே வரும்போது ஹேண்ட் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளவும், முகக்கவசம் அணிந்து வரவும் பள்ளி, கல்லூரிகளை அரசு அறிவுறுத்தி உள்ளது.
காற்றில் விடப்பட்ட சமூக இடைவெளி
இந்நிலையில், வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் ஐடா ஸ்கட்டர் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றாது கும்பலாக வெளியே வரக்கூடிய காட்சியைப் பார்க்க முடிகிறது.
சிறார்களை வரிசையில், சமூக இடைவெளியைப் பின்பற்றி அனுப்பி விடாமல் பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் அலட்சியமாக விட்டுவிடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், பள்ளி நிர்வாகம் இதை முறைப்படுத்த முனைப்புக்காட்டுவதில்லை எனப்புகார் எழுந்துள்ளது. இதே போன்று வேலூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெற்றோர் வேதனை
தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நேரத்தில், கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பள்ளிகள் பின்பற்றாமல் இருப்பது குறித்து பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து கேட்பதற்காக வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் முனிசாமியைத் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதையும் படிங்க:10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை