நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறை, உயர் கல்வித் துறை அலுவலர்கள் தீவிர ஆய்வும் விசாரணையும் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் என்ற மாணவரும் முறைகேடாக கல்லூரியில் சேர்ந்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அலுவலர்கள் விசாரணை நடத்தி வந்ததையடுத்து மாணவன் இர்பான் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொள்ளாமல் காலதாமதம் செய்வதற்காக விடுமுறை எடுத்ததாகத் தெரியவந்தது. பின்னர் இர்பானின் தந்தை முகமது சபியை இன்று சிபிசிஐடி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவரான முகமது சபி வாணியம்பாடியிலும் திருப்பத்தூரிலும் மருத்துவமனை நடத்திவருகிறார். இதற்கிடையில், முகமது சபியின் கைது விவகாரத்தை சிபிசிஐடி காவல் துறையினர் மிகவும் ரகசியமாக கையாண்டு வருகின்றனர்.
மேலும் வெளிநாடு தப்பிச் சென்ற மாணவன் இர்பானை பிடிக்கவும் காவல் துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அடுத்தடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருவதால் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்க:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் 3 பேர் கைது!
NEET தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம் -மும்பை செல்லும் சிபிசிஐடி