வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் நவீன் குமார், தருஷ் குமார், மோகன்குமார் ஆகிய மூன்று பேரும் 10ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மூவரும் மாலை பள்ளி முடிந்தவுடன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு காணாமல் போன மூன்று மாணவர்களையும் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் இராணிப்பேட்டை பகுதியில் இன்று மீட்டனர்.
அதன்பின், மூன்று மாணவர்களிடமும் காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி தலைமையாசிரியர் வேணுகோபால், தங்களைப் பள்ளியில் பல மாணவர்கள் முன்னிலையில் அடித்ததாகவும், வீட்டில் பெற்றோர்களிடம் தங்கள் மீது புகார் தெரிவிக்கப் போவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
அதனால் அச்சமடைந்த மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல பயந்து வெளியில் சென்றதாகத் தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் காணாமல் போனதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியைகள் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி