வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் திருப்பத்தூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் காரணமாக அதே பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவும் தங்கவேல் தனது மகன் வீட்டிலேயே தங்கினார். இதையடுத்து, இன்று காலை தங்கவேல் தனது வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து, தங்கவேலு உடனடியாக திருப்பத்தூர் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் கிராம பகுதியில் நடந்த இந்த திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.