வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போலி சிபிஐ அலுவலர்களைப் போல் நடித்துப் பலரை ஏமாற்றிவரும் கும்பல் ஓர் இடத்தில் முகாமிட்டுள்ளதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலி சிபிஐ இருவர் கைது
இதன் அடிப்படையில் விருதம்பட்டு பகுதியில் தனிப்படை காவல் துறையினர் திடீரென ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல் துறையினர் காட்பாடி கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த அரிஹரன் (28), காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மத்தின் (43) ஆகியோரை கைது செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
மேலும் அந்த வீட்டிலிருந்து பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
அதாவது, இருவரும் சிபிஐ அலுவலர்கள் போல் போலியாக அடையாள அட்டையை வைத்திருந்தனர். அதில் மத்தீன் தன்னை சிபிஐ கண்காணிப்பாளர் என்றும் அரிஹரன் சிபிஐ ஆய்வாளர் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
பல லட்சம் மோசடி
இதையடுத்து, அவர்களிடமிருந்து அடையாள அட்டைகள், நான்கு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்தப் போலி சிபிஐ அலுவலர்கள் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல இடங்களில் பொதுமக்களை மிரட்டி பல லட்சம் ரூபாயை கறந்து மோசடியில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பலுடன் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
ஃபேஸ்புக் ஃபேஷன்
அதாவது, ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் காவல் சீருடை அணிந்தபடி புகைப்படம் பதிவிட்டு அதில் சிபிஐ அலுவலர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களது நட்பு வட்டாரத்தில் உள்ள பலர், இவர்களை அணுகி பல்வேறு அரசுப் பணிகள் தொடர்பாகவும் வேலை தொடர்பாகவும் சிபாரிசு வேண்டி அணுகியுள்ளனர். இந்த வகையிலும் பலரிடம் லட்சக்கணக்கில் இந்தக் கும்பல் மோசடி செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடத்தில் அசத்தும் ஆசிரியர்