திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்த இவ்விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ’வணக்கம்’ எனத் தமிழில் பேசி தனது சிறப்புரையை தொடங்கினார். அப்போது அவர், “வலிமையான கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து விடுக்கப்பட்ட சவால்களில் ஒன்றைக் கண்ட மண்ணில் நிற்பதை நான் பெருமையாக உணர்கிறேன். 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சி, நமது விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும்.
’கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ என்ற திருவள்ளுவரின் அறிவார்ந்த வார்த்தைகள் உங்களது லட்சியமாகத் திகழ்கின்றன. இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் 65% பேர் பெண்கள் என்பதை அறிந்து நான் பெருமிதம் கொள்கிறேன். இன்று, சிறந்த கல்வித் திறனுக்கான தங்கப் பதக்கம் பெற்ற 66 மாணவர்களில், 55 பேர் பெண்கள் என்பது இதற்கு தெளிவான சான்றாகும். இது இந்தியாவின் பிரகாசமான வருங்காலத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
இதனிடையே, விழாவில் குடியரசு தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென பெருத்த சத்தம் எழுந்ததால், அவர் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். தொடர்ந்து ஒலி எழுந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சென்று பார்த்தபோது, குடியரசுத் தலைவரின் கான்வாயில் வந்திருந்த கார்களில் ஒன்றிலிருந்து, ஹாரன் ஒலி வந்ததை கண்டறிந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஹாரன் தானாக அடித்துள்ளது பின்னர் தெரியவந்தது. இதனால் பட்டமளிப்பு விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து