வேலூரை அடுத்த அப்துல்லா புரத்தில் மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ், உள்நாட்டு விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விமான நிலைய அலுவலகம் மற்றும் ஓடுதளம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் அப்துல்லாபுரம்-இளவம்பாடி வழியாக அணைக்கட்டு செல்லும் சாலை, விமான நிலையப் பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது மாற்று சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் விமான நிலைய பணி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்றது. ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விமான நிலையம் அமைப்பதற்கு கூடுதலாக 16 ஏக்கர் நிலம் தேவைப்படுவது குறித்தும், இதற்காக நிலம் கையகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, தற்போது அங்கு பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டின் ஒரு பகுதியை கையகப்படுத்தவும், அதற்கு பதிலாக மாற்று இடம் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. விமான நிலைய பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு சாலையின் மரங்கள், குடிநீர் குழாய், கேபிள் ஒயர் ஆகியவற்றை அகற்றி, மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒருவர் கொலை!