வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே, SRMU - தென்னிந்திய ரயில்வே பணியாளர்கள் அமைப்பின் பொதுச்செயலாளரும், AIRF (All India Railwaymen's Federation) இன் நிர்வாகத் தலைவருமான கண்ணையா தலைமையில் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையையும், அதற்குத் துணைபோகும் நிர்வாகத்தின் போக்கையும் விளக்கி விளக்கக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் பகுதிகளிலுள்ள ரயில்வேத் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் கண்ணையா பேசியதாவது:
100 நாட்கள் திட்டம் என்ற அடிப்படையில், ரயில்வேத் துறையை தனியாரிடம் விடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இத்துறையில் சுமார் 1,28,000 கோடி ரூபாய் வரை வருவாய் வருகிறது. அனைத்துத் துறைசார்ந்த செலவுகளைக் கழித்தாலும், சுமார் 68,000 கோடி ரூபாய் லாபத்தில் இத்துறை இயங்குகிறது. தற்போது இத்துறை தனியார் மயமாக்கப்படட்டால், ரயில் பயணச்சீட்டுகள் அனைத்தும் தற்போதைய தொகையைவிட, பலமடங்கு உயர்ந்துவிடும்.
குறிப்பாக, சென்னையிலிருந்து கோயம்புத்தூர்வரை செல்லும் பயணச்சீட்டு தொகை 835 ரூபாயாக உள்ளது, வயதானவர்களுக்கு 535 ரூபாயாக உள்ளது. இதுவே தனியார்வசம் சென்றால் 2,000 ரூபாயாக உயர்ந்து, பொதுமக்கள் பயணம்செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். தற்போது நடைமுறைபடுத்தப்பட இருக்கும் தனியார் மயமாக்குதலால், இரண்டு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு, மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசின் ஏமாற்று வேலையில் சிக்கிக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு பொதுமக்களாகிய நீங்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். தனியார் மயமாக்குதலை மத்திய அரசு கைவிடவில்லையென்றால், பொதுமக்களைத் திரட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.