ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்மப்பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு, இரணியனை வதம் செய்த நரசிம்மர் தனது கோபத்தை தணிக்க, இம்மலை மீது ஏறி தியானத்தில் அமர்ந்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே, இத்தலநாயகருக்கு யோக நரசிம்மர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர். இக்கோயில் அமைந்துள்ள மலை பெரிய மலை என்றும், அருகில் அனுமன் கோயில் இருக்கும் மலை சின்ன மலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு மலைகளிலும் ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாழைப்பழம், ரொட்டி போன்ற உணவுப் பண்டங்களை அவற்றுக்கு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பொது முடக்கத்தால் பக்தர்களுக்கு தரிசனத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டு, பூசைகள் மட்டுமே நடைபெற்றுவந்தன. ஊரடங்கு காலங்களில், மக்களே உணவிற்கு திண்டாடி வந்த நிலையில், இங்கு வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் உணவில்லாமல் மிகவும் தவித்தன.
இதையறிந்த பக்தர்கள் சிலர், அவற்றுக்கு உணவளிக்க முன்வந்து, மக்களிடமும் உதவிகள் பெற முயற்சித்தனர். அவ்வாறு கிடைத்த நிதியை வைத்து, சோளிங்கரில் உள்ள வாழைப்பழம், வேர்கடலை விற்பனையாளர்கள் சிலரது வங்கிக்கணக்கில், வாரந்தோறும் பணம் செலுத்தி, அவர்களிடமிருந்து, காலையில் 25 முதல் 30 கிலோ வாழைப்பழமும், பகலில் தயிர் சாதமும், மாலையில் வேர்கடலையும் வாங்கி குரங்குகளுக்கு தினமும் கொடுத்து வருகின்றனர். நாள்தோறும், மலை மீது ஏறிச்சென்று குரங்குகளுக்கு உணவளிக்க ஆட்களையும், அவர்கள் நியமித்துள்ளனர்.
முதலில் இருவரால் மட்டுமே தங்களின் கைக்காசை போட்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணி, தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதன் மூலம், இன்னும் பல மாதங்கள் குரங்குகளுக்கு உணவளிக்கும் அளவிற்கு பொருளாதார உதவிகள் கிடைத்து சிறப்பெய்தியுள்ளது.
சிறியளவில் துளிர்விடத் தொடங்கிய இவர்களது சேவை, காலப்போக்கில் மலையளவாக உருவெடுத்து, அதனால் தற்போது ஏராளமான குரங்குகள் பசியாறி வருவது நெகிழ்ச்சி மிகுந்த அரும்பணியாகவேப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'செங்காந்தள் செவ்வானம்' - நாமக்கல் மக்களை அசத்திய மாலை!