இந்தியாவில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும்வகையில், 2011ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பேரணி நடைபெற்றது.
வேலூர்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்தார் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் நம் வாக்கு நம் உரிமை, உங்கள் வாக்குகளை விற்க வேண்டாம், வலுவான ஜனநாயகம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்துகொண்டனர். பேரணி அண்ணா கலையரங்கத்தில் தொடங்கி வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே முடிவடைந்தது.
சேலம்
சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணியானது திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் முடிவடைந்தது. இதில் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
நாகை
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மாணவர்கள் மத்தியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி வாசிக்க அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றனர். முன்னதாக நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
திண்டுக்கல்
கொடைக்கானலில் வருவாய்த் துறையின் சார்பாக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணியில் கலந்துகொண்ட இளம் வாக்காளர்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையு படிங்க: தேசிய வாக்காளர் நாள் - இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்!