கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பல தளங்களுடன் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ்நாடு அரசானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்கள், தற்போது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு, நோய்த்தொற்று பரிசோதனையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணப்பாறை ராஜிவ் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்ததையடுத்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட அந்த பகுதிகளுக்கு தினமும் கிருமி நாசினி தெளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து, மணப்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் வருகை தந்தால், அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் மூலம் சுகாதாரத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.