திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனி முருகன் கோயிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வருவாய் வரக்கூடிய கோயிலாக சமயபுரம் மாரியம்மன் கோடில் விளங்குகிறது. ஆண்டுதோறும் பக்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
இச்சமயத்தில் பூச்சொரிதல் விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். திருச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பூ கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்படும். இதைத்தொடர்ந்து சித்திரை மாதம், முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக சித்திரை தேரோட்ட விழா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் வழக்கம்போல் பூச்சொரிதல் விழா நடைபெற்று முடிந்தது. கரோனா இரண்டாவது அலை தாக்குதல் காரணமாக சித்திரை தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இது பக்தர்களுக்கு பெரும் கவலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. எனினும் கோயில் உள் பிரகாரத்தில் சிறிய அளவிலான கட்டுத் தேர் மூலம் தேரோட்டம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து இன்று(ஏப்.20) கட்டுத் தேர் மூலம் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அறநிலையத் துறையினர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தேரோட்ட விழா நடைபெறவில்லை என்று பக்தர்கள் மத்தியில் கவலை இருந்தாலும், கட்டுத் தேர் மூலம் உள்பிரகாரத்தில் நடந்த இந்த தேரோட்டம் பக்தர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிநீர் தொட்டிகளை அதிகரிக்க திட்டம் - சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்!