திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிக் குழு தலைவர் சரண்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு நன்றி உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது துறையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 13 இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்ததில் 52 லட்ச ரூபாய் செலவிட்டது தொடர்பான தீர்மானமும் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்மானத்தை கவுன்சிலர்களின் பார்வைக்குத் தெரியாமல் நிறைவேற்ற முயல்வதாகவும், அதில் 52 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஒரு ஆண்டாக இதே தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக வைச்சேர்ந்த அசோகன், மற்றும அதிமுக, தேமுதிக கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு தவறானது என கூறிய தலைவர் சரண்யா, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறி தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார். திமுகவை சேர்ந்தவர்கள் தலைவராகவும், துணைத் தலைவராகவும் உள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்தவரே தீர்மானத்தை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிமுக, தேமுதிக கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.