திருச்சி மாவட்டம் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது.
இந்தப் பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தலைமை வகித்தார். அவருடன் உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ, ஆசிரியர்கள் புஷ்பராஜ், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த காமாட்சி பட்டியை சேர்ந்த விவசாயி நல்லதம்பி என்பவர் மகள் ஜமீனா, முசிறியை சேர்ந்த தனியார் பள்ளியில் போக்குவரத்து மேலாளராகப் பணியாற்றும் பழனிமுத்து என்பவரின் மகள் பவதாரணி, மணமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையன் மகள் ருக்மணி ஆகியோர் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வில் ஜமீனா (280) மதிப்பெண்களும் பவதாரணி 154 ருக்மணி 109 மதிப்பெண்களும் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர். அப்போது தலைமையாசிரியர் தீபா புத்தகங்களை மாணவிகளுக்கு பரிசாக வழங்கினார்.
மாணவிகள் வகுப்பு ஆசிரியைகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது மாணவிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.
பயிற்சி அளித்த வகுப்பு ஆசிரியர்கள் புவனேஸ்வரி, சியாமளா தேவி, அருணாதேவி மற்றும் சக ஆசிரியர்களுக்கும் உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் நன்றி” என்றனர்.
நீட் தேர்வுக்காக மாணவிகள் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து கோச்சிங் கிளாஸ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை ஓமந்தூரார் மாளிகையில் நடைபெறும் நேர்காணலில் மாணவிகள் 3 பேரும் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!