திருச்சி: 108 வைணவத் தலக்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இம்முறை அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன.
பத்து நாள்கள் கொண்டாடப்படும் பகல்பத்து வைபோகத்தின் முதல் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்கக் கிளியுடனான ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.
டிசம்பர் 14 சொர்க்கவாசல் திறப்பு
பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்வின் முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் 13ஆம் தேதியும், சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி அதிகாலையும் நடைபெற உள்ளது. உற்சவத்தில் இருபது நாள்களும் (பகல்பத்து-ராப்பத்து) மூலவர் நல்முத்து அங்கியில் காட்சியளிப்பார். இவ்விழாவில், இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்னும் முடிவு எடுக்காததால் பக்தர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.
இதையும் படிங்க: தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்