திருச்சி: வையம்பட்டியை அடுத்த பெரியவெள்ளபட்டியைச்சேர்ந்த எலக்ட்ரீசியன் சின்னதுரை(41) என்பவர் நேற்று (அக்.12) வீடு ஒன்றிற்கு புதியதாக மின் இணைப்பு வழங்க, மின் கம்பத்தில் ஏறியபோது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக, இவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் மின் வாரியப் பணிகள் செய்த வந்ததாகக் கூறப்படும் நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு மின் வாரியத்தை அணுகியுள்ளனர். ஆனால், மின் வாரியம் தரப்பில், அவர் தங்களிடம் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளவில்லை எனக்கூறப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சின்னதுரையின் உறவினர்களும் பொதுமக்களும் அவரது உடலை வாங்க மறுத்து திடீரென மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர்கள் கோபி, முருகேசன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மின் வாரிய உதவி செயற்பொறியாளருடன் சமரசம் பேசியதைத்தொடர்ந்து, உறவினர்களிடமிருந்து மின் வாரியத்திற்கு கோரிக்கை மனு பெற்றுக்கொண்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின், சின்னதுரை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வையம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு