தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என்று விரிந்து விழுப்புரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. வேலை, தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு மட்டுமின்றி, இதர மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் குடியேறினர். ஆனால் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, இட நெருக்கடி, சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் தற்போது மக்கள் சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சென்னைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோதே இந்த திட்டத்தை முன்மொழிந்ததோடு, இதற்கு திருச்சியை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால், அவர் உயிரிழந்த பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதன் பின்னர் அதிமுக பல முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தபோதும் இதற்கு உயிர் ஊட்டப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பின்னர் இது குறித்த பேச்சு மீண்டும் தலைதூக்கியது. திருச்சியை இரண்டாம் தலைநகராக அறிவிக்கும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், அப்படி ஒரு திட்டமே அரசிடம் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் இந்த பேச்சு அமைதியானது.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரின் கருத்து பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது. திருச்சியில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து தலைநகரின் பட்டியலில் தங்களின் ஊர்களை சேர்த்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுக் கிண்டலடிக்கும் அளவுக்கு இரண்டாவது தலைநகர் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது.
இந்நிலையில், பிறந்த மண்ணை விட்டு கொடுக்க முடியாமல், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட திருச்சி அரசியல்வாதிகள் திருச்சியை தலைநகராக்க குரல் கொடுக்க தொடங்கினர். இப்படி இரண்டாம் தலைநகர் பிரச்னை வெடித்துக் கொண்டிருந்த வேளையில், முதலமைச்சர் பழனிசாமி தலையிட்டு, "அமைச்சர்கள் கூறுவதெல்லாம் அரசின் கருத்தாகாது" என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி அரசியல் வரலாற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கால கோயில்கள், நீர் நிலைகள், மத்திய தொழில் நிறுவனங்கள், முக்கிய கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள் என திருச்சி, மதுரைக்கு சளைத்தது கிடையாது. எனினும், சென்னை உயர் நீதிமன்ற கிளை, எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவை திருச்சியில் இருந்து கைநழுவி போனது போல் இரண்டாம் தலைநகரமும் பறிபோகிவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாமஸ் கூறியதாவது, "சென்னையில் நீர் ஆதாரங்களாக விளங்கிய ஏரி, குளங்கள் எல்லாம் கட்டடங்களாக மாறிவிட்டன. குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட கூவம் ஆறு சாக்கடை ஆனது. தற்போது திருச்சி துணை தலைநகரமாக தேர்வு செய்யப்பட்டால் அடிப்படை கட்டமைப்புகளை பெரிய அளவில் உருவாக்க வேண்டும். ஆனால், ஆற்றையும் விவசாய நிலங்களையும் கைவைக்காமல் எந்த வளர்ச்சியையும் செய்ய முடியாது.
எம்ஜிஆர் காலக்கட்டத்தில் அவர் நினைத்தது வேறு. ஆனால் தற்போது நிர்வாக ரீதியாக திருச்சியில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனினும் நகரப் பகுதியில், உய்யக்கொண்டான், காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாத நிலை உள்ளது. இதற்கே தீர்வு காணப்படாத சூழ்நிலையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என்று கூறுவது காவிரியையும், டெல்டா பகுதியையும் பாலைவனமாக மாற்றக் கூடிய செயலாகத்தான் அமையும்" என்றார்.
'மதுரையை 2ஆவது தலைநகராக்க விரும்பிய எம்ஜிஆர்' - மதுரை முன்னாள் மேயர்
இது குறித்து திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம் கூறுகையில், "தற்போதுள்ள கடுமையான நிதி நெருக்கடியில் துணை தலைநகரம் அமைப்பது என்பது இயலாத காரியம். சென்னையில் அனைத்து வசதிகளும் இருப்பதால் இரண்டாவது தலைநகரம் உருவாக்கப்பட்டாலும் அனைத்து அதிகார மையங்களும் அங்கு தான் இருக்கும். திருச்சி ஒரு கிளை போன்று தான் செயல்படும். எந்த பிரச்னை என்றாலும் சென்னையில் தான் தீர்வு கிடைக்கும் என்ற நிலை இருக்கும். வரும் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக அமைச்சர்கள் இவ்வாறு பேசுகின்றனர். அதனால் 2ஆவது தலைநகர் என்பது தேவையில்லாத விஷயம்" என்றார்.
பொருளாதாரத்தில் தென் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் அதற்கு தீர்வு காண, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமே தவிர தலைநகரக் கோரிக்கை, அதைத் ஒருபோதும் தீர்த்துவிடாது. மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சி என்பதே தற்போதைய தேவை. அதற்காக சில மாவட்டங்களை மட்டும் குறி வைத்தல் அறம் ஆகாது. ஒரு மாவட்டம் இரண்டாவது தலைநகரமாக மாறினால் பிரச்னையை சந்திக்கும். அதனால், அதை கைவிடுவதே தகும். அதுமட்டுமல்லாமல் தலைநகர் அந்தஸ்து திருச்சிக்கு வேண்டாம் என்பதே அம்மாவட்ட மக்களின் திண்ணம்.
ஆந்திராவில் 5 தலைநகர் இருக்கும்போது, தமிழ்நாட்டில் இருந்தால் தவறில்லை!