திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கைது செய்யப்பட்டு இந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்கதேசத்தினர், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 70 பேர் நேற்று முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சட்டவிரோதமாக கைது செய்து, சிறப்பு முகாம் என்னும் சிறையில் அடைத்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்களுக்கு பிணை கிடைத்தும் விடுவிக்க மறுக்கிறார்கள் எனவே எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர் 20 பேர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத் துறை அலுவலர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மற்ற கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.