திருச்சிராப்பள்ளி: மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சிறுகுறு தொழில் முனைவோர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
அப்போது, “தொழில் முனைவோர் பிரச்னை குறித்து நான் கட்சி தொடங்குவதற்கு முன்பே அறிந்திருக்கிறேன். இந்த துறையில் தரகுத் தொகைக் கலாச்சாரம் என்பது எல்லோரையும் பாதிக்கிறது. முழுநேரம் யாரும் எதையுமே கிழிப்பதில்லை. முழு நேர உழைப்பாளிகளும் யாரும் இல்லை. தமிழ்நாட்டை மாற்றி அமைக்கும் வேலையை செய்ய நாங்கள் வந்துள்ளோம்.
தர்ம வான்களை நாம் கோட்டையில் தேடிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் நாடெங்கும் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசம் உங்கள் பணம். எப்படி ஏழ்மையை பாதுகாத்து வைத்திருக்கிறாரகள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. வசதியானவர்கள் ஓட்டு போடுவதில்லை. ஏழைகளை காசு கொடுத்து வாங்கி விடுகிறார்கள். எங்களுக்காக கூடுபவர்கள் நேர்மையாளர்கள். தேர்தல் தள்ளி போனாலும், முன்னே வந்தாலும் நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராகவுள்ளோம்.
இப்போது தட்டும் கரங்கள் முத்திரை இடும் கரங்களாக மாறட்டும். இப்போது தேவை நேர்மையான அரசு. ஜனவரி முதல் மக்கள் நீதி மய்யம் காகிதப் பயன்பாடு இல்லாத கட்சியாக மாறும். தமிழ்நாடு அரசும் இதை செய்ய வேண்டும். மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு நகரங்களை உருவாக்குவோம். வர்த்தக மையம் அனைத்து நகரங்களிலும் ஏற்படுத்தப்படும். குப்பையில் மின்சாரம் தயாரிப்போம்.
நல்லவர்களை தாக்கும் நோயாக ஊழல் உள்ளது. ஓட்டுச்சாவடியில் ஊழலை தடுப்பது உங்கள் கையிலுள்ளது. அதனை நோக்கி அதிதீவிரமாக, அதிவேகமாக நடைபோடும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது. மாற்றுத் திறனாளி ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம். அப்போது தான் மாற்று திறனாளிகளின் மனுக்கள் உரிய இடத்தில் சென்று சேரும்” என்றார்.