திருச்சி: மணப்பாறையில் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக்கூட்டம் அகில இந்திய தலைவர் பிஷப்.மோகன்தாஸ் தலைமையில் திருச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறுபான்மை மக்களாகிய கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்; போதிய கல்லறை வசதி இல்லாததால் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு கல்லறைத்தோட்டம் வழங்கிட வேண்டும்;
மேலும் பட்டா இல்லாத கிறிஸ்தவ சபைகளுக்கு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும்; 38 மாவட்டங்களில் 24,000 சபைகள் உள்ளதால் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பை நலவாரியத்தில் இணைத்திட வேண்டும்; தேவாலயங்களில் சுதந்திரமாக ஆராதனை செய்ய சட்ட சபையில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர் பிஷப் மோகன்தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'சிறுபான்மையின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் நடைபெற்ற சிறுபான்மை இன மக்களின் மீதான தாக்குதல்களை அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது.
தற்போது சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைப்பெற்றுள்ள இந்த திமுக அரசு எங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை’ உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இவ்வமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் ஜான் ஹாலப், பொருளாளர் கிங்சிலி, அரசியல் பிரிவு தலைவர் விஜய், மாநில மகளிர் அணி தலைவி சாந்திராஜ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மணப்பாறையில் லஞ்சம் கேட்ட வட்டார இயக்க மேலாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது