திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அண்ணாமலை நகரில் நடைபெற்றது. இதற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் மேகராஜன், மாநிலச் செய்தித் தொடர்பாளர் பிரேம்குமார், மாநில இணை செய்தித் தொடர்பாளர் வரப்பிரஹாஸ், வடக்கு மாவட்டத் தலைவர் வாழையூர் பொன்னுசாமி, மாவட்டச் செயலாளர் மறவனூர் செந்தில்குமார், ஜான் மெல்கியோராஜ், மேட்டுப்பட்டி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- அக்டோபர் 2ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு, நவம்பர் 26 அன்று டெல்லி சென்றடைவது. மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் டெல்லியிலேயே சாகும்வரை உண்ணாநிலை இருப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
- விவசாயிகளுக்குத் தனிநபர் காப்பீடு
- 2016இல் பயிர்க்கடன் வாங்கிய பெரிய விவசாயிகளின் கடனை, மத்திய கால கடனாக மாற்றிவிட்டு தற்பொழுது கடன் தள்ளுபடி செய்யாமல் இருப்பது விவசாயிகளிடம் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேற்படி கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- காவிரி ஆறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்
- அனைத்துக் கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்
- மதுவை குடித்துவிட்டு மதுபாட்டில்களை வேளாண் நிலத்தில் வீசி எறிவதால் நிலம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் நிலத்தில் இறங்கி வேளாண் பணிகளைச் செய்ய முடியவில்லை. மதுவை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்காமல், மக்கும் நெகிழி பாட்டில்களில் தயார்செய்து விவசாயிகளையும், வேளாண் நிலத்தையும் காப்பாற்ற வேண்டும்
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.